அபார ருசி நிறைந்த ஆற்காடு மக்கன் பேடா செய்யும் முறை
தேவையான பொருட்கள்
சர்க்கரை இல்லாத பால்கோவா அல்லது ஜாமூன் மிக்ஸ் – 100 கிராம்
தயிர் – 100 கிராம்
நெய் – 30 கிராம்
வனஸ்பதி – 50 கிராம்
மைதா – கால் கிலோ
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு, வெள்ளரி விதை, பேரீச்சம்பழம் ( அனைத்தும் சம அளவில்) – 150 கிராம்.
அனைத்து பருப்புகளையும் பொடியாக சீவிக்கொள்ளவும் இத்துடன் சிறிது ஏலக்காயினை நன்கு பொடி செய்து கலக்கி வைக்கவும்.
பாகு செய்ய : சர்க்கரை – 750 கிராம், தேவையான அளவு தண்ணீர்
செய்முறை :
தண்ணீரில் சர்க்கரை மூழ்கி இருக்கும் அளவு நீர் சேர்த்து.. நன்கு ஒட்டும் பதத்தில் பாகினை காய்ச்சி ஆறவிடவும். மைதா மாவை ஆப்ப சோடாவுடன் சேர்த்து சலித்து வைக்கவும். பால்கோவா, வனஸ்பதி, மைதா, தயிர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும்.பிசைந்த மாவை 5 நிமிடம் ஊற விடவும்.
பெரிய கடலை உருண்டை அளவு மாவை எடுத்து சமோசா செய்வது போல (முக்கோணமாக இன்றி வட்டமாக) உள்ளே உலர் பருப்புகளின் கலவையை வைக்கவும். மாவை மூடி ஒரு தட்டில் மடித்தவற்றை அடுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ச்சவும்.
மடக்கி வைத்த பேடாவை எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைக்கவும். எண்ணெய் நன்கு வடிந்தபின்பு அதை காய்ச்சி வைத்த சர்க்கரைப் பாகில் போட்டு சிறிது நெய் ஊற்றி மூடி வைக்கவும்.5 மணி நேரம் ஊற விடவும்.!
கவனிக்க வேண்டியவை:
*பால்கோவாவிற்கு பதில் குலாப் ஜாமூன் மிக்ஸை பயன்படுத்தலாம்.
* பிசையும் போது மிருதுவாக கட்டி இல்லாது பால்கோவா/ மிக்ஸை பிசையவும்.
* சர்க்கரை கம்பி பதமென்பது ஒரு கம்பி பதம் போதுமானது.
*அதிகம் ஊறவிட அவசியம் இல்லை.
* 6நாட்கள் வரை இதை வைத்திருந்து சாப்பிடலாம்.
* உலர்பருப்புகளை மெலிதாக சீவி கலந்து போடுவது ருசியை அதிகரிக்கும்.
* பேடா செய்யும் போது எண்ணெயில் எடுத்த பேடாவை, எண்ணெய் வடிந்த உடனே பாகில் போடாவிட்டால், பேடா உடைந்து விடும். மக்கன் பேடா சூடாகவும் சர்க்கரைப்பாகு சிறிது ஆறியும் இருக்க வேண்டும்.
பால்கோவா, மைதா இரண்டும் இணைந்த இந்த இனிப்பு உள்ளே சுவையான உலர் பருப்புகளால் நிரப்பப்பட்டு இருப்பதால் எடுத்து வாயில் இட்டதும் கரையக்கூடிய அற்புதச் சுவையில் இருக்கும்!