FOOD
சமையல் குறிப்பு – சமையல் டிப்ஸ்
- ரசம் ஒரு கொதிக்கு அதிகமாக கொதிக்ககூடாது.
- காபிக்கு பால் ஒரு கொதிக்கு மேல் காயக்கூடாது.
- மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
- கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
- காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
- சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
- தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
- பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
- பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
- தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
- குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
- குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
- காய்கறிகளை நறுக்குவதற்கு முன் நன்கு கழுவ வேண்டும், காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவு கூடாது.
- காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.
- கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.
- பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
- பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.
அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக இருக்கும்.
- பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.
- எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
- கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.
- தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்… மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.
- வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.
- தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.
- தொண்டை கட்டிக்கொண்டால்… கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.
- அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.
- கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.
- துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்… சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.
- கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்… பிரமாதமான சுவையில் இருக்கும்.
- வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.
- பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்… பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.
- சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
13.குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்… சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.
- ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!
- வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!
- முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்… உடல் வலி குணமாகும்.
- மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து… சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.
- எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்… சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.
- பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்… நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.
- ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்… புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.
- குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்… விரைவில் குணமாகும்.
- கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.
- சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.
- இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.