போளி – ஏழைகளின் இனிப்பு என்று பெயர் பெற்ற பருப்பு போளி, இனிப்பான தேங்காய் போளி.
இந்த வார்த்தையை கேட்டவுடனேயே, எப்போதாவது உங்களுக்குள் என்ன நடக்கிறது என்று ஒரு கனம் யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அடுத்த முறை பாருங்கள். அந்த வார்த்தையை கேட்டவுடனேயே நாக்கில் இருக்கும் பத்தாயிரம் ருசி மொட்டுகள் ஜிங்கென்று எழுந்து நிற்கும். உண்மையா இல்லையா? காரணம் போளியில் இருக்கும் சுவை.
நீங்கள் பஸ் ஸ்டாண்டிலோ அல்லது தெருவோரத்திலோ மஞ்சள் கலர் போலியை, (சரியான வார்த்தைதான்) வாங்கி சாப்பிட்டு இருந்தால் இது நடக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை. 15,000 வங்கிக்கணக்கில் வந்த மாதிரியே இருக்கும்.
போளிக்கென்று சில லட்சணங்கள் இருக்கின்றன. போலி கருத்தக்குட்டியாக இருக்கக்கூடாது. அது சிவந்தும், சிவக்காத கருஞ்சிவப்பு நிறுத்தில் வெந்திருக்க வேண்டும்.
எங்கும் வாய்பிளந்து இருக்கக்கூடாது. அப்படி திறந்திருந்தால், உள்ளே உள்ள பூர்ணத்தின் மனம் வெளியேறி, முழு சுவை உணர முடியாது. ரீல் போட்டு முதல் சீன் ஓடிய பின்னர் பார்க்கும் திரைப்படம் போல் இருக்கும்.
போளியை மட்டும் எப்போதும் சுடச்சுட சாப்பிட்டால்தான் அதன் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடியும். அருமையான சாப்பாடு சாப்பிட்ட இலையில் கடைசியில் வழித்து திங்கும்போது கிடைக்கும் சுகம், சாப்பாட்டை முழுமையாக சாப்பிட்டபோது கூட கிடைத்திருக்காது.
போளியில் பல வகைகள் இருக்கின்றன. அதில் எனக்கு பிடித்தது, பருப்பு போலியும், தேங்காய் போலியும்தான்.
போளி ஏதோ சாப்பிட்டோம், கை கழுவினோம் என்று இருக்கக்கூடாது. அதற்கு ஒரு ஐந்து நிமிடம் கொடுத்து, விள்ளல், விள்ளலாக பிய்த்து, பழைய நினைவுகளை அசைப்போட்டு சாப்பிட்டு பாருங்கள்… மனம் ஜிவ்வென்று பறக்கும். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உடல் சிலிர்த்து, புத்தம் புது தெம்புடன் வேலைக்கு கிளம்பிவிடுவீர்கள். அதற்கு அதன் காம்பினேஷனைப் பற்றி தெரிந்துக் கொண்டால், அடுத்த முறை ரசிப்பீர்கள்.
போளி மாவு, வெறும் மைதாவில் செய்ததுதான். ஆனால், அதில் ஒரு கலை இருக்கிறது. பிசைந்த மாவில், கைவிட்டால், அப்படியே வழுக்கிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். அந்தக்காலத்தில் ஆட்டுக்கல்லில் அம்மாக்கள் மாவு அரைப்பார்கள். அப்போது அரிசி மாவு, அதிகம் தண்ணீர் விடாமல், கொஞ்சம் கெட்டியாக அரைக்கப்படும். உளுந்து மாவில் சற்று தண்ணீர் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். உபி.க்கு 15, தமிழகத்துக்கு 6 என்ற கணக்கு போன்று. அம்மாக்களின் கணக்கு மிகச்சரியாக இருக்கும்.
இந்த மாவு அரைக்கும்படலத்தில் அரிசி மாவு அரைக்கப்பட்டு பாத்திரத்தில் வழித்து வைத்திருப்பார்கள். அதில் கைவிட்டு மாவை அள்ளித்தின்ற அனுபவம் பலருக்கும் இருக்கும். அந்த பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் போளி மெத்து, மெத்து என்று சாப்ட்டாக இருக்கும்.
இந்த காலத்திலே யாருய்யா ஆட்டுக்கல்ல மாவு ஆட்டுறா என்று கோவையில் இருந்து கிஷோர் கேட்பது புரிகிறது. உங்க காலத்து பசங்களுக்கு சொல்ல வேண்டும் என்றால், குளோப்ஜாமூனில் கைவிட்டு பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த பதத்தில் விரல் இறங்கினால் மாவு சரியாக இருக்கிறது என்று அர்த்தம். இதற்காக மாவை எண்ணெய்… கொஞ்சம் அம்பானி பேமிலி என்றால், எண்ணெய்யில் கூட ஊற வைத்திருப்பார்கள்.
அடுத்தது பூரணம்.
இதில்தான்யா விஷயமே இருக்கிறது.. சும்மா நச்சென்று பருப்பும், மண்டைவெல்லமும், கூட ஏலக்காய் பொடி கலந்திருக்க வேண்டும். பருப்பும், வெல்லமும் இணைந்திருந்தால்தான் போளிக்கே உண்டான முழு லட்சனம் நிறைவு பெரும்.
வழ, வழா, கொழ, கொழாவாக பூரணம் இருந்தால், போளி, மைதா தோசையாகி, தோசைக்கல்லையும் கெடுத்துவிடும். பதம் சரியாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.
அடுத்து மாவு உருண்டையை உள்ளங்கையில் பிடித்து, கட்டை விரலையும், சுட்டு விரலையும் முனையில் பிடித்து அழுத்தினால் உருண்டையாக மாவு வெளியே வரும். அதை மனையின் மீது வைக்கப்பட்ட பிளாஸ்டிக் காகிதத்தில் நெய் தடவி வைத்து அழுத்த உருண்டையாக மாறும். அதில் பூரணத்தை வைத்து சுற்றிலும் இருக்கும் மாவை மேலே கொண்டு வந்து லாவகமாக மடித்து அதை மீண்டும் நெய்தடவி சப்பாத்தி மாவைப்போல் விரவி, தோசைக்கல்லில் வாட்டி எடுத்தால்….
அட, அடா…. சும்மா நச்சென்று போளி தயார்.
ஏழைகளின் இனிப்பு என்று பெயர் பெற்ற இந்த போளி, நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியைக் கொண்டது. ஒன்று இரண்டு சாப்பிட்டாலே முழு திருப்தி ஏற்படும். இந்த போளியின் முழுமையான சுவையை மதுரை மஹால் 3வது தெருவில் இருக்கும் புளியடிஸ் போலியில் உணர்ந்து, ரசித்து சாப்பிட்டுள்ளேன். இந்த சந்துல நுழையறப்பவே வாசனை சும்மா கும்முன்னு தூக்கும். இவர்கள் வெளிநாட்டுக்கும் அனுப்புகிறார்கள் என்பதுடன், முந்திரி போலி என்று புது வகையையும் தயாரிக்கிறார்கள்.
இங்கிலாந்துக்கு தப்பிப்போன உடனேயே ஆர்டர் அனுப்புறேன்… தயவு செஞ்சு அனுப்பி வைங்க என்று சொல்லிவிட்டு வந்துள்ளேன்…
போளியை வாங்கியவர்கள், அதை அப்படியே சுருட்டி மடித்து சாப்பிடுபவர்களை பார்த்தால், லடாக்கில் இருக்கும் சீனக்காரனின் துப்பாக்கியின் முன்பு நிறுத்திவிட தோணும். போளியை சாப்பிடுவதற்கு என்று சில முறைகள் உள்ளது. முதலில் ஒரு முனையில் இருந்து துண்டிக்க வேண்டும். அதுவும் பூர்ணம் சிந்தாமல். அதில் இனிப்பு சற்று குறைவாகத்தான் இருக்கும். எடுத்த உடனேயே ஜெனீபர் லோபஸ் அளவுக்கு எதிர்பார்க்கக்கடாது. அப்படியே விள்ளல், விள்ளலாக உள்ளேச் செல்ல… செல்ல… பரவசம் கூடும். அய்யோ… இப்பவே வாயில வழியுதே…. சொக்கா…. இப்படி சாப்பிட்டாதான் போளியின் முழுமையை நீங்கள் உணர முடியும்.
அடுத்த முறை போளியை சாப்பிடும்போது, சும்மா சாப்பிடாதீர்கள்…அம்மா அரைத்த அரிசி மாவு, பூரணம் என்று எல்லாவற்றையும் செக் செய்து, சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். பத்தாயிரும் ருசி மொட்டுகளும் உங்களை வாழ்த்தும். – ஜே.எஸ்.கே.பாலகுமார்